இணையம் மூலமே உலக நூலகங்களில் உள்ள புத்தகங்கள் தொடர்பான விவரங்களை தேட உதவும் புதுமையான தேடியந்திரம்.ஒற்றைத் தேடியந்திரம் மட்டும் போதாது! ஒரே வகையான தேடியந்திரமும் போதாது. உண்மையில், நமக்கு பல வகையான தேடியந்திரங்கள் தேவை என்பதை இணையத்தில் பல விதமான தருணங்களில் உணரலாம். புத்தக பிரியர்கள் நிச்சயம் புத்தகங்களை தேடும்போது இதை நிச்சயம் உணர்ந்திருக்கலாம்.

புத்தகங்களை தேடுவது என்றவுடன், பழைய தலைமுறைக்கு நூலகங்கள்தான் முதலில் நினைவுக்கு வரும். ஆனால் இணையத்துக்கு பழகிய தலைமுறைக்கோ, இணையத்தில் தேடல் என்றாலே தேடியந்திரம் தான் நினைவுக்கு வரும்.

அதற்கேற்பவே, எந்தப் புத்தகம் பற்றிய தகவல் தேவை என்றாலும் உடனே அதற்கான குறிச்சொல்லை தட்டி தேடினால் தேவையான தகவல்கள் கிடைத்துவிடலாம். அது மட்டும் குறிப்பிட்ட அந்தப் புத்தகத்தின் மின்னூல் வடிவையும் தேடலாம். அல்லது அந்தப் புத்தகத்தை மின் வணிக தளங்கள் மூலம் வாங்கிக்கொள்ளலாம். இன்னும் பல வசதிகள் இணையத் தேடலில் இருக்கின்றன.

ஆனால், இவை எல்லாமே போதுமானதாக இல்லாத தருணங்களில் என்ன செய்வது?

உதாரணத்துக்கு குறிப்பிட்ட புத்தகத்தின் முதல் பதிப்பு வெளியான ஆண்டு தெரியவேண்டும் என நினைக்கலாம். இதையே தேடல் பதமாக டைப் செய்து தேடிப்பார்க்கலாம் தான். ஆனால் பொருத்தமான முடிவு, தேடல் பட்டியலில் தோன்றாவிட்டால் என்ன செய்வது? இப்படி பலவிதமான தருணங்கள் புத்தகம் தொடர்பான தேடலில் ஏற்படலாம். அதிலும் ஆய்வு நோக்கில் தகவல் தேடுபவர்கள் பலமுறை இந்த சிக்கலை அனுபவித்திருக்கலாம்.

இதுபோன்ற தருணங்களில் நூலக தேடல் போல வராது எனும் உண்மையை உணரலாம். இப்படி நூலகங்களின் அருமையை உணர்ந்தவர்கள் வேர்ல்டுகேட் (www.worldcat.org) இணையதளம் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். வேர்ல்ட் கேட் ஓர் ஆச்சர்யமான தேடியந்திரம் - நூலகங்களில் புத்தகங்களை தேடுவதற்கான தேடியந்திரம். அதிலும் எப்படி தெரியுமா? இணையம் மூலமே உலகம் முழுவதும் உள்ள தேடியந்திரங்களில் தேட உதவும் தேடியந்திரம்.

இணையத்தை வலைப்பின்னல்களின் வலைப்பின்னல் என்று சொல்வது போல, வேர்ல்டுகேட் தேடியந்திரத்தை நூலகங்களின் வலைப்பின்னல் என்று சொல்லலாம். அதாவது, நூலகங்களின் வசம் உள்ள புத்தகங்கள் அட்டவணைகளின் தொகுப்பாக இது விளங்குகிறது. எனவே, இதில் ஒரு புத்தகத்தை தேடினால், உலகில் எந்த நூலகங்களில் எல்லாம் அந்த புத்தகம் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். அது மட்டுமா குறிப்பிட்ட அந்தப் புத்தகம் நமக்கு அருகாமையில் இருக்கிறதா? என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

அதன் பிறகு அந்த நூலகத்தில் மின்னூல் அட்டவணை இருந்தால் மேற்கொண்டு தகவல்களை இணையம் மூலமே அணுகலாம். மின்னூல் வடிவில் கூட அணுகலாம். இல்லை என்றால் நேராக நூலகத்தையே தேடிச்சென்றுவிடலாம். இன்னும் பல விதங்களில் இந்த தேடியந்திரத்தை பயன்படுத்திக்கொள்ளலாம்.இணைய யுகத்தில் நூலகத்தை பலரும் மறந்துவரும் நிலையில், நூலகங்களில் உள்ள புத்தக விவரங்களை தேடிப்பார்க்கும் வசதியை விரல் நுனியில் கொண்டு வருகிறது வேர்ல்டுகேட்.

சர்வதேச கூட்டு முயற்சியான ஆன்லைன் கம்ப்யூட்டர் லைப்ரரி செண்டர் அமைப்பின் (OCLC ) சார்பில் வேர்ல்ட்கேட் தேடியந்திரம் நிர்வகிக்கப்படுகிறது. 170 நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான நூலகங்கள் இதில் அங்கம் வகிக்கின்றன. பங்கேற்கும் நூலகங்களின் புத்தக அட்டவணைகள் அனைத்தையும் இதன் இணைய தொகுப்பு மூலம் அணுக கூடிய வகையில் வேர்ல்டுகேட் தேடியந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. புத்தகங்கள் பற்றிய விவரங்கள் மட்டும் அல்ல; நூலகங்களில் உள்ள டிவிடிக்கள் மற்றும் டிஜிட்டல் கட்டுரைகளின் விவரங்களையும் தேடலாம். 10,000-க்கும் மேற்பட்ட நூலகங்களில் இருந்து 200 கோடிக்கும் மேற்பட்ட புத்தககங்கள், டிவிடிக்கள் உள்ளிட்டவை தொடர்பான விவரங்களை தேடிப் பெறலாம்.

புத்தகம் சார்ந்த தேடலுக்காக இதை பயன்படுத்திப் பார்க்கும்போது இதன் அருமை புரியும். குறிப்பிட்ட புத்தகம் உள்ள நூலகத்தை தேடிக்கண்டுபிடிக்கும் அடிப்படை தேடல் வசதி தவிர, மேம்பட்ட தேடல் வசதியும் இருக்கிறது. ஏற்கெனவே இந்த சேவையை பயன்படுத்தியவர்களின் தேடல் தொடர்பான தகவல்களையும் வழி காட்டுதலாக கொள்ளலாம். பிரபலமான நூலகங்கள், புத்தகம் தொடர்பான பிரபலமான குறிச்சொற்கள், விமர்சனங்கள் என பல அம்சங்கள் இருக்கின்றன. நூலகரை கேளுங்கள் வசதியும் இருக்கிறது.

தமிழிலும் தேடலாம்!

இதில் ஆங்கிலம் தவிர பிற மொழிகளிலும் தேடும் வசதி இருக்கிறது. ஆகவே தமிழிலும் புத்தகங்களை தேடலாம். புதுமைப்பித்தன் முதல் சுஜாதா வரை தேடிப்பார்த்தாலும் நூலக புத்தகங்கள் வந்து நிற்கின்றன. எழுத்தாளர் சுஜாதா புத்தகங்களை தேடும்போது 200-க்கும் மேற்பட்ட முடிவுகள் தோன்றுகின்றன. சுஜாதா எழுதிய ஆர்யபட்டா, கமிஷனருக்குக் கடிதம், கணையாழியின் கடைசி பக்கங்கள் உள்ளிட்ட புத்தகங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இவை அருகாமையில் எந்த நூலகத்தில் கிடைக்கும் என்றும் பார்க்கலாம். அந்த நூலகம் அட்டவணை இணைக்கப்பட்டிருந்தால் நேரடியாக தேடலாம், அல்லது வேறு விதமாக தொடர்பு கொள்ள வேண்டும்.

ஜெயகாந்தன் புத்தகங்களை தேடினால் உன்னைப்போல ஒருவன் உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட முடிவுகள் வருகின்றன. பாரதி, திருக்குறள் என தேடினாலும் புத்தகங்களை அடையாளம் காட்டுகிறது. சினிமா என தேடினால் மாற்று சினிமா பற்றிய புத்தகம் முதல் வருகிறது. சரிதை என தேடும்போது காந்தியின் சத்திய சோதனை முதலில் வருகிறது. பல அரிய புத்தகங்களையும் அறிமுகம் செய்துகொள்ள முடிகிறது.

புத்தகம் வெளியான ஆண்டு, பதிப்புகள் போன்ற விவரங்களுடன் குறிப்பிட்ட எழுத்தாளரின் பிற நூல்களையும் பார்க்கலாம். அதேபோன்ற பிற புத்தகங்களுக்கான பரிந்துரையும் செய்யப்படுகிறது. குறிப்பிட்ட புத்தகங்களுக்கான மதிப்புரையை வாசிக்கலாம். நீங்களே கூட மதிப்புரை எழுதி சமர்பிக்கலாம்.

இதில் தேட தேட, புத்தகங்கள் தொடர்பான இத்தனை விவரங்களை தெரிந்துகொள்ள முடியுமா எனும் வியப்பு ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். புத்தக தேடலுக்காக வேர்ல்கேட் தேடியந்திரத்தை பயன்படுத்திப் பாருங்கள், உங்களுக்கே இது தெரியும்!
நன்றி-சைபர்சிம்மன், தொழில்நுட்ப எழுத்தாளர்.
தேடியந்திர முகவரி: http://www.worldcat.org/