ஆண்ட்ராய்ட் சாதனங்களின் பாதுகாப்பு தன்மை குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் வல்லுநர்கள், அண்மையில், புதிய வகை மால்வேர் புரோகிராம் ஒன்று வேகமாகப் பரவி வருவதனைக் கண்டறிந்துள்ளனர். இதன் வழிகளைச் சரியாகக் கண்டறிந்து, கட்டுப்படுத்தும் புரோகிராம்களை உருவாக்க முடியவில்லை என்று, இதனை உணர்ந்த Ars Technica என்னும் ஆய்வு மைய நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். 

இந்த மால்வேர் புரோகிராம், பிரபலமான ஓர் அப்ளிகேஷன் புரோகிராம் போலத் தன்னைக் காட்டிக் கொள்கிறது. இதனை, ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போனில், தரவிறக்கம் செய்து, பதிந்தவுடன், போனுடைய அடிப்படைக் கட்டமைப்பினையே மாற்றி, இன்னும் பல கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களுக்கு வழியை ஏற்படுத்தித் தருகிறது. இதனை, நீக்குவதற்கு மேற்கொண்ட முயற்சிகள் இதுவரை தோல்வியில் முடிந்துள்ளன.இந்த மால்வேர் புரோகிராம், தர்ட் பார்ட்டி அப்ளிகேஷன் ஸ்டோர்களில் காணப்படுகிறது. இதன் குறியீடுகள், கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் பேஸ்புக், ட்விட்டர் செயலிகள் போலக் காட்டிக் கொள்கின்றன. எனவே, இவை செயல்படத் தொடங்குகையில், நாம் மாற்றம் எதனையும் உணர்வதில்லை. வழக்கமான புரோகிராம்கள் போலவே செயல்படுகின்றன. ஆனால், இவற்றில், கெடுதல் விளைவிக்கும் வகையில் பல குறியீடுகள், இவற்றில் அமைக்கப்பட்டுள்ளன. அவை இயக்கப்படுகையில், போனின் ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் நுழைகின்றன. 


அதில், மற்ற கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்கள் வரும் வகையில் பாதைகளை அமைக்கின்றன. ஆப்பரேட்டிங் சிஸ்டம் மூலமாக இவை போனில் நுழைந்துவிடுவதால், இவற்றை நீக்குவதற்கு புரோகிராம்கள் வடிவமைப்பது சிரமமாகிறது. ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினையே நீக்கி, புதியதாக, சரியான, சிஸ்டத்தினை நாம் பதிந்தாலே இதிலிருந்து தப்பிக்க இயலும்.


தற்போதைக்கு Shedun, Shuanet, and ShiftyBug என அறியப்பட்டுள்ள இந்த புரோகிராம்கள், விளம்பரங்களை காட்டுவதில் மட்டும் வெற்றி பெற்றுள்ளன. ஆனால், ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை இவை வளைத்துவிட்டால், நம் தனி நபர் டேட்டாவினை எளிதாக, இவை கைப்பற்றலாம். அவற்றின் மூலம் நிதி இழப்பு ஏற்படவும் வாய்ப்பு உள்ளன.


இவை தானாகவே, வேகமாகப் பரவி வருகின்றன. ஏறத்தாழ, 20 ஆயிரம் அப்ளிகேஷன்களை (பேஸ்புக், ஸ்கைப், ட்விட்டர் போன்றவை) இவை மாற்றி அமைத்துள்ளன. இந்தியா உட்பட பல நாடுகளில், இந்த மால்வேர் பரவி வருவதாக, Ars Technica ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுவரை, கூகுள் பிளே ஸ்டோர் போன்ற அதிகார பூர்வ ஸ்டோர் இயங்கும் தளங்களை இவை சென்றடைந்ததாகத் தெரியவில்லை.


எனவே, அப்ளிகேஷன் புரோகிராம்களை, உங்கள் ஸ்மார்ட் போனில் தரவிறக்கம் செய்வதாக இருந்தால், மிகக் கவனமாக, அவை உரிய அதிகாரபூர்வ தளங்களில் இருந்து பெறப்படுவதனை உறுதி செய்து, பின்னர் தரவிறக்கம் செய்திடவும். தர்ட் பார்ட்டி ஸ்டோர்களிலிருந்து எந்த அப்ளிகேஷனையும் இறக்கிப் பயன்படுத்த வேண்டாம்.