Responsive Ad

251 ரூபாய்க்கு ஸ்மார்ட் போன்… நிஜத்தில் சாத்தியமா?

வெறும் 251 ரூபாய்க்கு ஒரு ஸ்மார்ட் போன்… நம்பவே முடியவில்லை பலராலும். ஆனால், நம் பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பரிக்காரே ‘ஃப்ரீடம் 251’ என்கிற பெயரில் அதை அறிமுகப்படுத்தியபோது அதை எப்படி நம்பாமல் இருக்க முடியும்? 

நொய்டாவில் இயங்கும் ‘ரிங்கிங் பெல்ஸ்’ என்ற இந்திய நிறுவனம் இந்த ஸ்மார்ட் போனை தயாரித்து வெளியிடப் போகிறது என்கிற தகவல் வெளியானவுடன், மூன்று, நான்கு போன்களையாவது வாங்கிட

வேண்டும் என்கிற வெறியில் இருந்தவர்கள் பலர். விளைவு, இந்த போன் வாங்குவதற்கான ஆன்லைன் முன்பதிவு ஆரம்பமான சில நிமிடங்களிலேயே அந்த நிறுவனத்தின் வலைதளம் ஸ்தம்பித்துப் போனது. அதாவது, ஒரு நொடிக்கு ஆறு லட்சம் ‘ஹிட்’கள் பதிவாகி இருக்கிறது. இது கூகுளின் ஒரு நொடியின் ஹிட்டைவிட அதிகம். இத்தனைக்கும் இந்த போனை இனிமேல்தான் தயாரிக்க வேண்டும் என்கிறது ‘ரிங்கிங் பெல்ஸ்’ நிறுவனம்.

வெறும் 251 ரூபாயில் ஸ்மார்ட் போன் தருவதாக சொல்கிறார் களே, இது நிஜத்தில் சாத்தியமா என்ற கேள்வியைக் கேட்காதவர் களே இல்லை. இதையே நாம் பெங்களூருவை சேர்ந்த கோகுல்நாத் ஸ்ரீதரிடம் கேட்டோம். 
இவர் பிட்ஸ்பிலானியில் பயின்றவர். தற்போது நாளொன்றுக்கு பயனாளிகள் விரும்பும் பத்து செய்திகளை மொபைல் போன்களுக்கு கொண்டுவரும் ‘டென்ரெட்ஸ்’ என்கிற மொபைல் சேவையின் நிறுவனர் மற்றும் இயக்குநர். கடந்த நான்கு வருடங்களாக டெக்னாலஜி தொழில் சார்ந்த தொழில் முனைவோராக இருக்கிறார்.
தொழில்நுட்பம் எப்படி?
‘‘இந்த ஃப்ரீடம் 251 மாடலில் 4 இன்ச் ஸ்கிரீனில், 540 x 960 பிக்ஸல் ரெசல்யூசனில் 1.3 GHz குவாட் கோர் பிராசஸர் பொருத்தப்பட்டு உள்ளதால், செயல்பாடுகள் சுமாரான வேகத்தில் இருக்கும். ஆண்ட்ராய்டின் லாலிபாப் ஓ.எஸ்-ல் செயல்படும் இந்த போனில் 8ஜிபி இன்டர்னெல் மெமரி ஸ்டோரேஜ் உள்ளது. 32 ஜிபி வரை மெமரி கார்டுகள் பொருத்திக் கொள்ளலாம். 1450mAh பேட்டரி பொருத்தப்பட உள்ளது. இது சராசரியாக ஒரு நாளைக்கு தாங்கும். 
ரேம் மெமரி (RAM) 1 ஜிபி எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது மோசமான மெமரி என்று கூற முடியாவிட்டாலும், லாலிபாப் ஓ.எஸ்-ன் பின்னணியில் சில செயலிகள் ஓடிக்கொண்டே இருக்கும் என்பதால், மற்ற டெக்னிக்கல் விஷயங்கள்தான் போனின் செயல்பாட்டு வேகத்தை தீர்மானிக்கும். 
மேலும், இதன் ப்ரைமரி கேமராவே 3.2 எம்பிதான் உள்ளது. அதிலும் முன்பக்கமுள்ள கேமரா 0.3 எம்பி மட்டுமே. இவ்வளவு குறைந்த விலைக்கு கொடுப்பதால், ஸ்க்ரீன், பேனல் இவையெல்லாம் எந்தத் தரத்தில் இருக்கும் என்று தெரியவில்லை.
இவ்வளவு குறைந்த விலைக்கு ஸ்மார்ட் போன்களை கொடுப்பதன் பின்னணியில் பெரிய நெட்வொர்க் ஜாம்பவான்கள் இருக்க வாய்ப்பு உள்ளதாக மக்கள் மத்தியில் ஒரு பேச்சு கிளம்பி இருக்கிறது. காரணம், இந்த நிறுவனங்களின் சிம் கார்டு இந்த போனில் பயன்படுத்துவதன் மூலம் இந்த நிறுவனங்களின் வருமானம் அதிகரிக்கும் என்பது இந்த காரணத்துக்கு சொல்லப்படும் லாஜிக். ஆனால், இந்த போன் டூயல் சிம் வசதி கொண்ட போன் என்று சொல்லப்பட்டிருப்பதால், இந்த நிறுவனங்கள் இதன் பின்னணியில் இருப்பதற்கான வாய்ப்பு இருக்கிற மாதிரி தெரியவில்லை.


சாத்தியமில்லை..!
குறைந்த விலைக்கு ‘ஆகாஷ்’ டேப்லட்டை தயாரித்த டேட்டா விண்ட் நிறுவனத்தின் இயக்குனர் சுனித் சிங் துலி, ‘இவர்கள் சொல்லி இருக்கும் ஸ்பெசிபிகேஷன்களை வைத்துப் பார்க்கும்போது, இவர்கள் நிர்ணயித்திருக்கும் விலையைவிட எட்டு மடங்கு செலவாகும்’ என குறிப்பிட்டுள்ளார். ‘ஃப்ரீடம் 251’ திட்டத்தில் அரசாங்கத்தின் பங்கு ஏதும் உள்ளதா? அதாவது ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் மானியம் ஏதும் வழங்குகிறதா, அப்படி மானியம் ஏதும் தருவதாக இருந்தால், அதை ஏன் அரசாங்கம் அறிவிக்கவில்லை என்கிற கேள்விகள் எழவே செய்கின்றன. 
டெக்னிக்கல் பின்னணி!
இந்த ஸ்மார்ட் போனின் விலை மிகவும் குறைவு என்றாலும் இந்தக் குறைந்த கட்டணத்திலேயே இந்த போனை தயாரிக்கும் ‘ரிங்கிங் பெல்ஸ்’ நிறுவனத்துக்கு 31 ரூபாய் லாபம் கிடைக்குமாம். இத்தனைக்கும் இந்த ‘ரிங்கிங் பெல்ஸ்’ நிறுவனத்தின் நிறுவனர் மோஹித் கோயல் வலுவான டெக்னிக்கல் பின்னணியைக் கொண்டவரல்ல என்கிறார்கள். இதுவரை இவர் எங்கிருந்தார், என்ன செய்துகொண்டிருந்தார் என யாருக்கும் தெரியவில்லை. சில வருடங்களுக்கு முன்பு வரை, தன் தந்தையின் மளிகைக் கடையில் உதவியாக இருந்தார் என்று சொல்லப்படுகிறது. ஃபேஸ்புக், ஆப்பிள் என பெரிய வெற்றி பெற்ற நிறுவனங்களின் நிறுவனர்கள் சிறு வயதில் இருந்தே டெக்னிக்கல் பின்னணியோடு இருந்தது முக்கியமான விஷயம். 
ஆரம்பிச்சு அஞ்சு மாசம்தான் ஆகுது!
‘ரிங்கிங் பெல்ஸ்’ நிறுவனம் தொடங்கி ஐந்தே மாதங்கள்தான் ஆகிறது. குறைந்த விலையில் செல்போன்கள் தயாரிக்கும் குறிக்கோளோடு செயல்படும் இந்த நிறுவனம் இதுவரை 4u, மாஸ்டர், ஸ்மார்ட் 101 என்று மூன்று மாடல்களில் போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அவற்றுள் ஸ்மார்ட் 101, இந்தியாவிலேயே மலிவான 4ஜி மொபைல் ஆகும். ‘ஃப்ரீடம் 251’ செல்போன் பாகங்கள் தயாரிக்கும் ஆலைகளை உத்தரகாண்ட் மற்றும் நொய்டாவில் சுமார் 250 முதல் 350 கோடி ரூபாய் செலவில் இந்த நிறுவனம் அமைக்கவுள்ளது. மேலும், நாடு முழுக்க 650 சர்வீஸ் சென்டர்கள் அமைக்கப்படும் என்று சொல்லி இருக்கிறது. எனினும், இவர்களுக்கு லைசென்ஸ் எப்படி இவ்வளவு சீக்கிரம் கிடைத்தது, கம்பெனிக் கான முதலீடு எங்கிருந்து வந்தது என எதுவுமே வெளிப்படையாக தெரியவில்லை. 
திடீர் வெப்சைட்!
251 ரூபாய் போனை வாங்க பதிவு செய்யவேண்டிய இணையதள டொமைனை அவசர அவசரமாக சில நாட்களுக்கு முன்னர்தான் வாங்கியிருக்கிறார்கள் என்று வேறு சொல்கிறார்கள். இவ்வளவு அவசரமாக இதை செய்ய வேண்டிய காரணம் என்ன? 
மற்ற கம்பெனிகளின் போன்!
மீடியாவுக்கு ‘ஃப்ரீடம் 251’ மாடல் என காட்டிய போன் ‘ஆட்காம்’ என்கிற கம்பெனியின் ஏற்கெனவே சந்தையில் இருக்கும் IKon 4 என்ற மாடல் என்று சர்ச்சை கிளம்பியபோது ‘இதுவேதான் எங்கள் போன் என்று கூறவில்லை. இது போல இருக்கும் என ஒரு மாடலுக்காக தான் இதைக் காட்டுகிறோம்’ என்றது ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம். டெமோ போனில் காட்டப்பட்ட ஹோம் ஸ்க்ரீன் ஐகான் ஆப்பிள் போனின் வடிவமைப்பில் இருப்பதாக பலரும் சுட்டிக் காட்டுகின்றனர். உண்மையில் டெமோவில் இருப்பது போலவே, காப்பிரைட் செய்யப்பட்ட ஆப்பிளின் வடிவமைப்பில் இவர்கள் போன்களை தயாரித்தால் நிச்சயம் ஆப்பிள் நிறுவனம் நஷ்ட ஈடு கோரும். இப்படி எழும்பும் சர்ச்சை களையும் சந்தேகங்களையும் தாண்டி, செல்போன் மார்க்கெட்டில் 30 சதவிகிதத்தை கைப்பற்றுவதே தங்கள் இலக்கு என்கிறது இந்த நிறுவனம். 
ஆப்ஸில் வருமா ஆப்பு?
‘தூய்மையான இந்தியா’ மற்றும் வேறு சில அரசு திட்டங்களின் செயலிகள் போனில் இன்பில்ட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. இவ்வாறு ‘ப்ரீ லோடிங்’ செய்து தனியார் கம்பெனி செயலிகளையும் போனில் ஏற்றி அதன் மூலம் அதிக லாபம் சம்பாதிக்க முடியுமா என்றால், அதற்கான சாத்தியக்கூறுகள் சற்றுக் குறைவுதான். ‘லூமியா’ போன்ற போன் மாடல்கள் எல்லாம் இவ்வாறான ‘ப்ரீ லோடட்’ செயலிகளைதான் முக்கிய விளம்பரமாக முன்னிறுத்தின. அதோடு இல்லாமல் எப்படியும் ஸ்மார்ட் போன் என்பதால் நிச்சயம் ப்ளே ஸ்டோர் இருக்கும். மக்கள் தங்களுக்கு வேண்டிய செயலிகளை எப்படியும் பதிவிறக்கம் செய்துகொள்ளதான் போகிறார்கள்.
ரிஸ்க் பெருசு, லாபம் சிறுசு!
இந்த நிறுவனம் சொல்கிறபடி, ஒரு போனுக்கு 31 ரூபாய் லாபம் எனில், பல லட்சம் போன்கள் விற்பனையா னாலும் கிடைக்கப் போவது சில கோடிகள் லாபம்தான். பல ஆயிரம் கோடி புரளும் மொபைல் போன் மார்க்கெட்டில் இவ்வளவு குறைவான லாபம் பார்க்கப் போகும் ‘ரிங்கிங் பெல்ஸ்’ நிறுவனத்தை பெரிய செல்போன் நிறுவனங்கள் எளிதில் தூக்கி சாப்பிட்டுவிடும். 
அதோடு இந்தியாவின் தொலை தொடர்புத் துறை அமைச்சகமும் இந்த நிறுவனத்தையும், ஃப்ரீடம் 251 மொபைலை குறித்தும் தொடர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவித்திருக்கிறார்கள். இவர்கள் சொல்லும் எல்லா கணக்குகளையும் தாண்டி, மொபைல் மார்க்கெட்டில் ‘ரிங்கிங் பெல்ஸ்’ தொடர்ந்து நீடிக்க என்ன செய்யப் போகிறது என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்” என்று முடித்தார் கோகுல்நாத் ஸ்ரீதர்.
மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சரும் சமூக இணையதளங்களும் இந்த ஸ்மார்ட் போன் பற்றி எவ்வளவோ எடுத்துச் சொன்னபின்பும் ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் பின்வாங்கிய மாதிரி தெரியவில்லை. பார்ப்போம், இந்த நிறுவனம் என்ன செய்கிறதென்று.
சொன்னபடி செல்போன் தராவிட்டால்..?

ரூ.251-க்கு ஆண்ட்ராய்ட் செல்போன் என்று ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் அறிவித்தவுடன் இந்தியா முழுக்க பலரும் வாங்க முண்டியடித்து, மேற்கொண்டு அந்த செல்போனை ஆர்டர் செய்ய முடியாதபடிக்கு அந்த நிறுவனத்தின் இணையதளம் ஸ்தம்பித்தது.

ஏறக்குறைய பல கோடி பேர் அந்த நிறுவனத்தின் இணையதளத்தை பார்வையிட்டாலும் 30 ஆயிரம் பேர்தான் போனுக்கான பணத்தைத் தந்து இருக்கிறார்களாம். முதலில் கேட்கும் 25 லட்சம் பேருக்கு வருகிற ஜூன் 30-ஆம் தேதிக்குள் இந்த போன் தரப்படும் என்று சொல்லி இருக்கிறார் ரிங்கிங் பெல்ஸ் நிறுவனத்தின் தலைவர் அசோக் சாடா. இந்த நிறுவனம் சொன்னபடி போனைத் தரவில்லை என்றால், மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் தயங்காது என்று எச்சரித்திருக்கிறார் மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்.