Responsive Ad

ஃபேஸ்புக்கின் அபாயகரமான திட்டம்!

இலவச இணையத் திட்டத்தை ‘ஃப்ரீ பேசிக்ஸ்’மூலமாக இந்தியாவில் அறிமுகப்படுத்த இருப்பதாகத் தொடர்ந்து ஃபேஸ்புக் நிறுவனம் பிரச்சாரம் செய்துவருகிறது. முழுக்க முழுக்க இலவசச் சேவை வழங்கும் திட்டம் என்று கூறிவருகிறது.

 ஃபேஸ்புக் பயனாளர்களிடம் இத்தகைய உத்தி என்றால், மறுபுறம் ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைவர் மார்க் ஸக்கர்பெர்க் மீண்டும் மீண்டும் இந்தியாவின் தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமான டிராயைத் தொடர்புகொண்டு, இந்தியாவில் ‘ஃப்ரீ பேசிக்ஸ்’திட்டத்தைக் கொண்டுவர கடுமையாக முயற்சித்துவருகிறார். இது இந்தியாவில் இணையச் சமநிலையைப் பாதிக்கும் என்ற அச்சம் விமர்சகர்களால் முன்வைக்கப் படுகிறது. இந்நிலையில், சமீபத்தில் டிராய் தன் மின்னஞ்சல் வழியாக ஃபேஸ்புக்கின் பிரச்சார நடவடிக்கையைப் பகிரங்கமாக விமர்சித்தது.

ஃபேஸ்புக் நிறுவனம் முன்மொழியும் திட்டத்தின்படி ஃபேஸ்புக் உள்ளிட்ட சில வலைதளங்களை இணைய கட்டணமின்றி நுகர் வோர் பயன்படுத்த முடியும். ஆனால், ஏற்கெனவே மொபைல் டேட்டா சேவைக்குக் கட்டணம் செலுத்திவிட்டுத்தான் ஒட்டுமொத்த இணைய சேவையையும் நாம் பயன்படுத்த வேண்டியிருக்கிறது. ஃப்ரீ பேசிக்ஸ் அறிமுகமானால், இலவச சேவை வழங்கப்படலாம். 

ஆனால், அடிப்படைத் தகவல் பரிமாற்றம் தவிர ஆடியோ, வீடியோக்களையும், ஃபேஸ்புக்கோடு உடன்படிக்கை செய்துகொள்ளாத மற்ற இணையதளங்களையும் அதில் இலவசமாகப் பயன்படுத்த முடியாது. ஆனால், இந்தத் தகவல்களைச் சாதுரியமாக மறைக்கிறது ஃபேஸ்புக்கின் பிரச்சாரம்.

பயனாளர்களுக்குப் புரியாத வார்த்தைகளைக் கொண்டு ஜோடிக் கப்பட்ட படிவம் மூலமாக அவர்களது ஆதரவைத் திரட்டிவருகிறது. போதாக்குறைக்கு, படிவங்கள் அத்தனையும் டிராய்க்கு அனுப்பிக் கொண்டே இருந்தது ஃபேஸ்புக். இதன் மூலமாக டிராயின் நம்பகத்தன்மையை வென்றெடுக்கத் திட்டமிட்டது. ஆனால், டிராய்க்கு அனுப்பும் மின்னஞ்சல்கள் உரிய இடத்துக்குப் போய்ச் சேரவில்லை. 

அதற்குக் காரணம், மின்னஞ்சல்களைக் கையாளும் நபர் அதைத் தடுக்கிறார் என சந்தேகம் எழுப்பியது. இந்தத் தருணத்தில்தான் டிராய்க்கும் ஃபேஸ்புக்குக்கும் இடையில் மூண்டிருந்த பனிப் போர் வெடித்தது. அர்த்தமுள்ள கலந்தாலோசனை நடவடிக்கையாக இருந் திருக்க வேண்டிய ஒன்றை, முரட்டுத்தனமான பெரும்பான்மைவாத, தூண்டிவிடப்பட்ட கருத்துக் கணிப்பாக மாற்றியிருப்பதாக ஃபேஸ்புக் குக்குக் கடும் கண்டனம் தெரிவித்தது டிராய்.

தகவல் தொழில்நுட்ப யுகத்தில் நாம் ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்ளும் விதத்தை இத்தகைய ஊடகங்கள் கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல், அதன் போக்கையே முற்றிலுமாக மாற்றி அமைக்கும் வல்லமையும் பெற்றுள்ளன. அதிலும் சட்டதிட்டங்களிலும், அரசுக் கொள்கைகளிலும் அவை ஊடுருவிவிட்டால், அதைவிடவும் ஆபத்து வேறெதுவும் இருக்க முடியாது. 

வணிகம் செய்வதற்கான உரிமம் கிடைத்துவிட்டதால், அந்தத் தளத்தைத் துஷ்பிரயோகம் செய்வது மிகப் பெரிய தவறு. குறிப்பாக, மக்களின் கருத்துக் கணிப்பை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தி, அரசுக் கொள்கைக்குள் நுழைய முயற்சிப்பது கண்டிக்கத் தக்கது. ‘இண்டர்நெட்.ஓஆர்ஜி’என்ற பெயரில் தான் செய்யத் திட்டமிட்டதற்கு வேறொரு கவர்ச்சிகரமான பெயரை மாற்றி, இந்த வேலையில் இறங்கியிருக்கிறது.

இந்தியாவின் தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்தின் செயல்பாட்டில் மூக்கை நுழைப்பதை எந்த விதத்திலும் ஃபேஸ்புக் நியாயப்படுத்த முடியாது. அதேசமயம் டிராய்க்கும் ஃபேஸ்புக்குக்கும் இடையில் நடக்கும் இந்தப் பிரச்சினையில் உண்மையான பிரச்சினை நீர்த்துப்போய்விட்டது. 

100 கோடிக்கும் அதிகமான மக்கள்தொகையும் அதிலும் பெரும்பான்மை ஏழை எளிய மக்களைக் கொண்ட ஒரு நாட்டுக்கு எத்தகைய இணைய சேவை தேவை? இந்தக் கோணத்தில் தகவல் தொழில்நுட்ப முன்னேற்றங்களை முன்னெடுத்தால் உண்மையிலேயே தொழில்நுட்ப வளர்ச்சி பரவலாகப் பலரைச் சென்றடையும்.