யூடியூப் பகிர்வு: உறவும் முரணும்... கவனிக்கத்தக்க குறும்படம்!

பல நேரங்களில் நாம் எதிர்பார்த்திராத சூழ்நிலைகளில்தான் நாம் பலமுறை சிக்கிக்கொள்ள நேரிடுகிறது பிரச்சனையின் தீவிரத்தைப் பொறுத்து வலிகள் கூடலாம் குறையாலாமே ஒழிய அதன் இழப்புகள் சமயத்தில் ஈடுகட்ட முடியாத அளவுக்கும் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அதுவே முடிவு இல்லை என்றுகூறுகிறது 'முரண்' எனும் இக்குறும்படம். | இணைப்பு கீழே |

வாழ்வில் திடீரென விவாகரத்தை எதிர்கொள்கிறாள் ஓர் இளம்பெண். இது அவளுக்கு பேரிடியாக அமைகிறது. அவளால் அதைத் தாங்கிக் கொள்ளமுடியவில்லை. அவனுடன் ஏற்கெனவே வந்த அதே காபிஷாப்புக்கு தன் தோழிகளுடன் வருகிறாள். அங்கு முதன்முதலில் தன் காதல் கணவனை சந்தித்த நினைவுகளைக் கூறி வெதும்புகிறாள்.

எங்கோ இருக்கும் தன் கணவனை நினைத்து ''என் வாழ்க்கை ஏன் இப்படி ஆனது? வினய் ஒருமுறையாவது என்னிடம் பேசு'' என்று கதறுகிறாள்.

ஒரு பெண்ணின் வாழ்வில் தென்றலைப் போல நுழைந்த காதல் எப்படி புயலாகிப்போனது. கடைசியில் அந்தப் புயலை எதிர்கொள்ளமுடியாமல் வீழ்ந்த எத்தனையோப் பெண்களில் ஒருத்தியாகத்தான் அவளும் இன்று!

''வாழ்க்கையில் நாம் தேர்ந்தெடுக்கும் முடிவுகளை அலசிப் பார்த்தால் நாம் எல்லோரும் கையாள்கிற விதங்கள் வேறுபாட்டோடும் முரணாகவும் இருப்பதற்கே வாய்ப்புகள் அதிகம்'' என்பதை அவர்களின் அருகிலுள்ள மனிதர்களை வைத்தே மிக எளிதாகக் காட்டிச் செல்கிறது குறும்படம். நாம் எடுக்கும் முடிவுகள் வெறும் நம்மை சார்ந்தது மட்டுந்தானா என்ற கேள்வியை எழுப்புகிறது.

இக்குறும்படத்தை பார்த்து முடிந்தபிறகு நமது சிந்தனை சிறகுகள் மெல்ல படபடக்கத் தொடங்குகின்றன.

வினய் விஜயகுமார் கச்சிதமான வசனத்தில், ரவிஷங்கர் வாழ்வுக்கு நெருக்கமான ஒளிப்பதிவில் விஜயலட்சுமி ஜிஎஸ், அனுஷா ப்ரவீண், ஸ்ரீவித்யா அனந்தராமகிருஷ்ணன், ப்ரவீண் நெப்பாலி, ஜனனி விஸ்வநாதன், பேபி அனிக்கா உள்ளிட்டோரின் நடிப்பு ஏதோ நமக்குத் தெரிந்தவர்களை ஞாபகப்படுத்துவது போலவே இருக்கிறது.

ஆதித்யா நாராயணன் இயக்கியுள்ள இத்தமிழ்க் குறும்படம் மும்பை சர்வதேச குறும்பட விழாவில் முதல் பரிசு பெற்றது.


யூடியூப் பகிர்வு: உறவும் முரணும்... கவனிக்கத்தக்க குறும்படம்! யூடியூப் பகிர்வு: உறவும் முரணும்... கவனிக்கத்தக்க குறும்படம்! Reviewed by ANBUTHIL on 7:59 PM Rating: 5
Powered by Blogger.