Responsive Ad

மெட்டைச் சொன்னால், பாடிக் காட்டினால், அதற்கானப் பாடலை தேடித் தரும் அருமையான இசை தேடியந்திரம்

இசை சார்ந்த தேடியந்திரங்கள் எப்படி எல்லாம் வியக்க வைக்கக் கூடியதாக இருக்கக் கூடும் என்பதற்கு 'மிடோமி' இசை தேடியந்திரம் அழகான உதாரணம் இது. இசைப்பிரியர்களை சொக்கிப்போக வைக்க கூடியது. இதில் பாடல்களை தேடலாம். அதுவும் எப்படி தெரியுமா? பாடலை பாடிக்காட்டி!

பாடல் கோப்புகளை தேடும்போது பாடலின் தலைப்பை அல்லது பாடகரின் பெயரை டைப் செய்து தேடிப்பார்ப்பது தானே வழக்கம். இசையை பொருத்தவரை இது பழைய பாணி தேடல். அதோடு பாடலை சரியாக அடையாளம் காட்டக்கூடிய தலைப்பு அல்லது முதல் வரி தெரியவில்லை என்றால் என்ன செய்வது? மாறாக நினைவில் உள்ள வரிகளை பாடிக்காட்டி அந்தக் குறிப்பிட்ட பாடலைத் தேட முடிந்தால் எப்படி இருக்கும்? முழுப் பாடலை பாட வேண்டும் என்று கூட அவசியம் இல்லை. சில வரிகளை பாடினாலும்கூட போது. இவ்வளவு ஏன்? மனதில் உள்ள பாடலை, நம் வீட்டு குளியலறையில் பாடுவதாக நினைத்துக்கொண்டு முணுமுணுத்தால் கூட போதுமானது. குறிப்பிட்ட அந்த பாடல் கண்டுணறப்பட்டு நம் முன் சமர்பிக்கப்படும்.

மிடோமி இதைத்தான் செய்கிறது. இசைக்கான உச்சபட்ச தேடியந்திரம் என வர்ணித்துக்கொள்ளும் மிடோமி, நாம் பாடிக்காட்டும், முணுமுணுக்கும் பாடல்களை தேடித் தருகிறது. விசில் அடித்து காட்டினாலும் புரிந்துகொள்கிறது. அதன் பிறகு, பாடிக் காட்டிய பாடல் பற்றிய விவரங்களை படியலிடுகிறது. பாடலை பாடியவர் உள்ளிட்ட விவரங்களையும் அவரது மற்ற பாடல்களையும் தெரிந்து கொள்ளலாம். அந்தப் பாடல்களை கிளிக் செய்து கேட்கலாம்.

பாடிக் காட்டுவதற்காக என்றே மிடோமியில் மைக் வசதி இருக்கிறது. இதனுள்ளே நுழைந்ததுமே முகப்புப் பக்கத்தில், இதற்கான 'உத்தரவிடு' பகுதி இருக்கிறது. க்ளிக் செய்து பாடுங்கள் அல்லது முணுமுணுக்கவும் என குறிப்பிட்டுள்ள அந்தப் பகுதியில் க்ளிக்கினால் உடனே உங்கள் கம்ப்யூட்டர் மைக்குக்கு அனுமதி கேட்கும். அனுமதி கொடுத்து விட்டு பாடிக் காட்டினால், அதைப் புரிந்துகொண்டு அடையாளம் கண்டு அதற்கான பாடலை தேடித் தருகிறது.

எங்கேயோ கேட்ட பாடல் நினைவின் ஆழத்தில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கிறதா? ஆனால், எவ்வளவு முயன்றும் அந்தப் பாடலை அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லையா? இதுபோன்ற இசை நெருக்கடியான நேரங்களில் மனதில் ஒட்டிக்கொண்டிருக்கும் அந்த பாடலின் மெட்டை முணுமுணுத்தாலே கற்பூரம் போல் அதன் ஒலி ஜாதகத்தை கிரகித்துக்கொண்டு தன்னிடம் உள்ள பாடல்கள் பட்டியலில் ஒப்பிட்டு அதை அடையாளம் சொல்லி விடுகிறது.

மிடோமியில் இன்னொரு முக்கியமான விஷயம் என்ன என்றால் இசைக்கு மொழி கிடையாது என்று சொல்வது போல இதற்கும் மொழி எல்லைகளோ வரம்போ கிடையாது. அதற்கு தெரிந்த ஒரே மொழி இசைதான். ஆக, எந்த மொழியில் வேண்டுமானாலும் பாடிக் காட்டு, தேடு மிடோமி தேடு என உரிமையுடன் கேட்கலாம். தமிழ், இந்தி என எல்லா மொழிகளிலும் இதில் பாடல் தேடப்பட்டிருப்பதையும் அவற்றுக்கான முடிவுகள் பட்டியலிடப்பட்டிருப்பதையும் பார்க்கலாம்.

மிடோமி இதை எப்படி சாதிக்கிறது என்றால், ஒவ்வொரு பாடலையும் அவற்றின் பல்வேறு ஒலி அம்சங்களாக பிரித்து வைத்துக்கொண்டு அவற்றை தன்னிடம் உள்ள பாடல்கள் பட்டியலில் பொருத்திப் பார்த்து சரியான பாடலை முன்வைக்கிறது.

மிடோமியின் தேடல் தொழில்நுட்பம் அதன் சொந்த படைப்பு. அதன் உரிமையாளர்கள் இணைந்து உருவாக்கியது. ஆனால் இந்த நுட்பம் செயல்பட பயன்படுத்தப்படும் பாடல்களின் தரவுப் பட்டியல் பயனாளிகளின் பங்களிப்பால் உருவானது என்பதுதான் சிறப்பு. இந்த தேடியந்திரத்தை பயன்படுத்தும்போது நாம் பாடிக்காட்டும் பாடலை இது தேடித் தருவதுடன் நின்றுவிடவில்லை. அந்தப் பாடலை தனது நினைவுத்திறனில் சேமித்து கொள்கிறது.

இப்படி ஒரு பாடலின் பல குரல் வடிவங்களை சேமித்து ஒப்பிடுவதன் மூலம் அந்தக் குறிப்பிட்ட பாடலின் ஒலி அடையாளங்களை மேலும் துல்லியமாக குறித்து வைத்துக்கொள்கிறது. ஆக, ஒவ்வொரு முறை ஒரு பாடல் பாடிக் காட்டப்படும்போதும் அந்த பாடலுக்கான ஒலிக்குறிப்புகள் மேலும் செழுமை பெறுகின்றன. இதன் பொருள், ஒரு பாடல் எத்தனை முறை எத்தனை விதங்களில் பாடப்படுகிறதோ அந்த அளவுக்கு அடுத்த முறை அதை கண்டுபிடிப்பது சுலபமாகிறது.

மனித குரலுடன் மனித குரல் ஒப்பிடப்படும் நுடபம் என மிடோமி இதைக் குறிப்பிடுகிறது. அதனால்தான் முணுமுணுக்கும் பாடலை கூட அடையாளம் சொல்ல முடிகிறது. மிகுந்த பெருந்தன்மையுடன், இது உங்களால் இயக்கப்படும் தேடியந்திரம் என்றும், மிடோமி நம்மைப் பார்த்து சொல்லிக் கொள்கிறது. பாடுங்கள், தேடுங்கள் என்றும் வேண்டுகோள் வைக்கிறது.

எளிதாக தேடக்கூடிய பரந்து விரிந்த இசை தரவு பட்டிலை உருவாக்குவதை நோக்கமாக கொண்டுள்ள மிடோமி இதற்கு பயனாளிகளை தான் அதிகம் நம்பியிருக்கிறது. இதைப் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் தங்களுக்கு பிடித்த பாடல்களை பாடிக் காட்டினால் இதன் இசை தரவு மேம்பட்டுக்கொண்டே இருக்கும். இதை சுலபமாக சாத்தியமாவதற்காக, தேடல் சேவையை தருவதுடன் தேடலை மையமாக கொண்ட சமூக வலைப்பின்னல் வசதியையும் அளிக்கிறது.

பயனாளிகள் இதில் பாடிக்காட்டும்போது மைக் மட்டும் அல்ல; வெப்கேமராவும் விழித்துக்கொள்கிறது. அந்தப் பாடலை பாடிக் காட்டியவர் என்று பயனாளியின் பெயரை குறிப்பிட்டு புகைப்படத்தையும் காட்டுகிறது. இப்படி மற்ற பயனாளிகள் பாடிக் காட்டிய பாடல்களையும் கேட்டு ரசிக்கலாம். நாம் பாடிக் காட்டியதும் தேடல் பட்டியலில் இடம்பெற்றிருக்கும். சக பயனாளிகள் பாடிய விதம் பிடித்திருந்தால் அவர்களுடன் தொடர்பு கொள்ளலாம். நட்பு கொள்ளலாம்.

இப்படி அதிகம் பாடிய பயனாளிகளுக்கு நட்சத்திர அந்தஸ்தும் வழங்கு முன்னணி பயனாளியாக அடையாளம் காட்டுகிறது. தேடும்போதுதான் பாட வேண்டும் என்றில்லை, மிடோமி ஸ்டுடியோ எனும் பகுதி இருக்கிறது. அதில் எப்போது வேண்டுமானாலும் பிடித்த பாடலை பாடிக்காட்டலாம். அந்தப் பாடல்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டு, அவை தேடப்படும்போது காண்பிக்கப்படும்.

பாடலைக் கேட்பதுடன் பாடவும் விருப்பம் கொண்டவர்களுக்கான இசை சங்கமாகவும் விளங்குகிறது மிடோமி. மிடோமியின் பின்னணியில் இருப்பது மெலோடிஸ் கார்ப்பரேஷன் எனும் நிறுவனம். 2005-ம் ஆண்டில் துவக்கப்பட்ட இந்நிறுவனம் 2010-ம் ஆண்டுக்குப் பிறகு மிடோமி சேவையை சவுண்ட்ஹவுண்ட் (http://www.soundhound.com) என பெயர் மாற்றி ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட்களில் செயல்படக்கூடிய செயலியாக மாற்றிவிட்டது. இந்தச் செயலி மூலம் ஸ்மார்ட்போனில் ஒரு பாடலை பாடிக்காட்டி, அல்லது எங்கோ ஒலித்துக் கொண்டிருக்கும் பாடலை சுட்டிக்காட்டி அதற்குரிய பாடலைத் தேடலாம். இணையத்திலேயே மிகவும் விரைவாக மெட்டுக்கேற்ற பாடலை தேடித்தரும் சேவை என தன்னைப்பற்றி குறிப்பட்டுக்கொள்கிறது.

இந்தச் செயலியில்தான் கவனம் செலுத்துகிறது என்றாலும், மிடோமி தளம் இன்னும் செயல்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது. ஏனெனில், அதில் உள்ள தரவுகள்தான் இந்தச் செயலியின் பலம். மனித குரலில் பாடிக் காடப்படும் பாடலைத் தேட மனிதர்களின் குரல் மாதிரி கொண்ட பட்டியல்தான் கைகொடுக்கிறது.

மிடோமி உண்மையில் இசை கண்டறியும் சேவைகள் பிரிவின் கீழ் வருகிறது. பாடல்களை அடையாளம் காணும் சேவை என்றும் இதனை புரிந்து கொள்ளலாம். இதேபோன்ற வேறு சில இசை கண்டறியும் தேடியந்திரங்களும் இருக்கின்றன.

தேடியந்திர முகவரி: www.midomi.com
THANKS TO,சைபர்சிம்மன், இணைய வல்லுநர்,