இன்னும் சில மாதங்களில் வெளிவர இருக்கும், விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை, விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8.1 சிஸ்டங்கள் வைத்து இயக்குபவர்கள், இலவசமாக அப்கிரேட் செய்து கொள்ளலாம் என மைக்ரோசாப்ட் அறிவித்திருந்தது. இது குறித்து பயனாளர்கள், பல சந்தேகங்களைக் கொண்டுள்ள நிலையில், விண் 7 மற்றும் விண்டோஸ் 8.1 கட்டணம் செலுத்தி வாங்காமல், திருட்டுத்தனமாக, காப்பி எடுத்துப் பயன்படுத்துபவர்களும், விண்டோஸ் 10 சிஸ்டத்தினை இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம் என மைக்ரோசாப்ட் அதிரடியாக அறிவித்துள்ளது. 

                                     
இதனைப் பலர் ஆச்சரியத்துடன் வரவேற்றுள்ளனர். ஏனென்றால், மைக்ரோசாப்ட் எப்போதும், வாடிக்கையாளர்கள் சரியான உரிமத்துடன் மட்டுமே ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்த வேண்டும் எனக் கண்டிப்புடன் அறிவித்து வந்துள்ளது. ஏதேனும் அப்கிரேட் செய்திடுகையில், திருட்டு சிஸ்டம் நகல் எனில், அதனை அப்கிரேட் செய்திடாமல் பாப் அப் மூலம் அறிவுறுத்தி வந்தது.


எனவே, தற்போது தரப்பட்டுள்ள அறிவிப்பு, மைக்ரோசாப்ட் முற்றிலும் புதிய இலக்குகளை இந்த அறிவிப்பின் மூலம் மேற்கொண்டுள்ளது தெரிய வந்துள்ளது. 2013 ஆம் ஆண்டு முதல், ஆப்பிள் நிறுவனம் தன் கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் போன்களுக்கான ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை இலவசமாக வழங்கி வருகிறது. இதனால் ஏற்படும் இழப்பினை, தன் போன்கள் விற்பனை மூலம் ஈடு செய்து கொள்கிறது. 

கூகுள் தன் ஆண்ட்ராய்ட் மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை இலவசமாகத் தந்து, இழப்பினை, விளம்பரங்கள் மூலம் ஈடு செய்து கொள்கிறது. மைக்ரோசாப்ட் நிறுவனம் இவற்றைக் கண்காணித்து இந்த முடிவை எடுத்திருக்கலாம்.

மேலும், பல கோடிக்கணக்கான கம்ப்யூட்டர்கள், விண்டோஸ் எக்ஸ்பி போன்ற திறன் இல்லாத ஆப்பரேட்டிங் சிஸ்டங்களைத் தொடர்ந்து கொண்டிருப்பதனை மைக்ரோசாப்ட் விரும்பவில்லை. குறிப்பாக, திருட்டு நகல் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களையும், விண்டோஸ் எக்ஸ்பி மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 6 ஆகியவற்றைப் பிடிவாதத்துடன் பயன்படுத்துபவர்களையும் கொண்டுள்ள சீனாவில், இந்த இலவச அறிவிப்பு, விண்டோஸ் 10 சிஸ்டத்தை அனைவரிடமும் கொண்டு சேர்க்கும் என மைக்ரோசாப்ட் எதிர்பார்க்கிறது. மேலும், சீன அரசாங்கம், விண்டோஸ் 8 மற்றும் 8.1 சிஸ்டத்தினை அரசு கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தத் தடை விதித்துள்ளது.

இருப்பினும், மைக்ரோசாப்ட் ஒன்றைத் தெளிவாக்கியுள்ளது. சரியான உரிமம் இல்லாமல் விண்டோஸ் 7 மற்றும் 8 பயன்படுத்தி வருபவர்களுக்கு, விண் 10 இலவசமாக வழங்கப்பட்டாலும், அது முறையான, சட்ட பூர்வமான ஆப்பரேட்டிங் சிஸ்டமாகக் கருதப்பட மாட்டாது என்று அறிவித்துள்ளது. எனவே, தங்கள் சிஸ்டத்தினை, விண் 10க்கு அப்கிரேட் செய்வதன் மூலம், சட்டபூர்வ பதிப்பாக மாற்றிக் கொள்ளலாம் என்ற எண்ணம் கொண்ட பலர் இப்போது திகைப்பில் உள்ளனர். சீனாவில் 75% சிஸ்டம் மற்றும் அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகள், கட்டணம் செலுத்தாத திருட்டு நகல்கள் என்பது உலகறிந்த உண்மை.

இந்த அறிவிப்பின் மூலம் மைக்ரோசாப்ட் சொல்வது என்ன? திருட்டு விண் 7 மற்றும் விண் 8 நகல்களுடன், விண் 10 அப்டேட் செய்திட்டாலும், அதுவும் திருட்டு நகல் எனவே கருதப்படும். மைக்ரோசாப்ட் நிறுவனத்தால், அது திருட்டு நகல் என அறிவுறுத்தப்பட்டு கட்டணம் செலுத்த அறிவிப்பு வழங்கப்படும். கட்டணம் செலுத்தவில்லை என்றால், திரை கருப்பாக மாற்றப்படும். Microsoft Security Essentials போன்ற தொகுப்புகளுக்கு அப்டேட் கிடைக்காது.

இன்னும் சில மாதங்களில், விண்டோஸ் 10, 190 நாடுகளில், 111 மொழிகளில் வெளியாக உள்ளது. விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8.1 உள்ளவர்கள், இலவசமாய் இதனைப் பெற்றுக் கொள்ளலாம்.