பிரபல சமூக வலைதளமான ஃபேஸ்புக்கின் கண்களில் விரல்கள் விட்டு ஆட்டுவிக்கும் அம்சங்களில் முன்னிலை வகிப்பது, ஸ்பாம் (SPAM) எனப்படும் 'வேண்டாத தகவல்கள் வேண்டியவர்களுக்கு பரவுதல்'.சமீபகாலமாக 'ரூ.200 ரீசார்ஜ்' ஸ்பாம் ஆரம்பத்தில் ஆங்கில வடிவிலும், பின்னர் அதன் தமிழாக்கத்திலும் ஃபேஸ்புக்கில் அங்கிங்கெனாதபடி எங்கும் உலா வந்துகொண்டிருந்தது. ரூ.200 ரீசார்ஜ்-க்கு ஆசைப்பட்டவர்கள் தங்கள் நட்பு வட்டாரத்துக்கு தங்களை அறியாமலேயே அந்தத் தகவலைப் பரப்பி இம்சித்து வந்தனர்.
                                         கோப்புப் படம்
இதனிடையே, அழகான பெண்களின் படங்களுடனும், வேறு மாதிரியான படங்களுடனும் ஸ்பாம்கள் வந்தவண்ணம் இருந்தன.

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக, ஃபேஸ்புக் பயனாளிகளை புது வகையில் ஆர்வத்தைத் தூண்டி க்ளிக்கிடச் செய்யும் ஒரு ஸ்பாம் பரவி வருகிறது.

அதாவது, ஒரு குறிப்பிட்ட நண்பரிடம் இருந்து இன்பாக்ஸில் 'அட்டாச்சுடு மெசேஜ்' வரும். அதை ஆர்வத்துடன் திறந்தால், நம் புரொஃபைல் பிக்சரைத் தாங்கிய இணைப்பு இருக்கும். அதனால், ஆர்வம் மேலும் மிகுந்து அதை அழுத்தினால் அவ்வளவுதான்... உங்கள் நண்பர்களுக்கெல்லாம் அதேபோன்ற இணைப்பு, உங்களிடம் இருந்து ஸ்பாமாக பரவும்.

பெரும்பாலும் நாம் சம்பந்தப்படாத விஷயங்களை ஸ்பாமாக வந்த நிலையில், நம் புகைப்படத்தைத் தாங்கியே இந்த ஸ்பாம் வைரஸ் போல பரவுவதால், இதில் இணையவாசிகள் எளிதில் சிக்கிவிடுகின்றனர்.

எனவே, ஃபேஸ்புக்கில் உங்கள் புரொஃபைல் பிக்சரைத் தாங்கி, உங்கள் நண்பர்கள் - தோழிகளிடம் இருந்து உள்டப்பிக்குள் இணைப்புத் தகவல் வந்தால், சற்றே உஷாராகி அதைத் தொடாமல் இருப்பதே நன்மை பயக்கும்.