Responsive Ad

ஃபேஸ்புக்கே கதி என கிடப்பவர்களுக்காக,,,

பேஸ்புக்கினால் ஒருபுறம் தகவல்களை உடனுக்குடன் அறிந்துகொள்வது, படிப்பு முடிந்து, வேலைமாறி செல்லும் நண்பர்களின் நட்பு வட்டத்தை பின் தொடர முடிவது, வேலை வாய்ப்பு, மருத்துவ உதவி, காணாமல் போனவர்களை கண்டறிய உதவுவது, யாரோ ஒருவருக்கு நடந்த மோசடியை எடுத்து போட்டு மற்றவர்களையும் உஷாராக இருக்க எச்சரிப்பது என்பது போன்ற பல பாசிட்டிவான விஷயங்கள் ஒருபுறம் இருந்தாலும், அந்த நோக்கத்திற்கான செயல்பாடுகள் ஒப்பீட்டளவில் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றன.

                                                  
அளவுக்கு அதிகமாக ஃபேஸ்புக்கே கதி என கிடப்பவர்கள் மன அழுத்தத்திலும், தனிமை உணர்விலும் தள்ளப்படுவார்கள் என்றும், தேவைக்கு மட்டுமே பயன்படுத்திக்கொள்வது நல்லது என்றும் எச்சரிக்கை மணி அடிக்கிறார்கள் ஆய்வாளர்கள்.

அரசியல்வாதிகள், அதிகாரிகளின் ஊழல், பொது இடங்களில் நடக்கும் விதிமீறல், காத்திருக்க வைக்கும் அரசாங்க ஊழியர்களின் நடத்தைகள், போக்குவரத்து விதிமீறல் என சமூக போராளி அவதாரம் எடுக்கும் குரூப் ஒருவகை என்றால், மறுபுறம் வீட்டில் உச்சா போவதில் தொடங்கி, அலுவலகத்தில், பயணத்தில், காபி ஷாப்பில், திரையரங்கில், சுற்றுலா செல்லுமிடத்தில், அவ்வளவு ஏன் கோவிலுக்கு சாமி கும்பிடப்போனால் கூட 'செல்ஃபி' யாகவும், குரூப்பாகவும் போட்டோவுடன் ஸ்டேட்டஸ் போட்டு, நட்பு வட்டத்தில் இருப்பவர்களை கவருகிறேன் பேர்வழி என்று கதற அடிப்பது இன்னொரு வகையறாவாக உள்ளது. 

இந்த வகையை சேர்ந்தவர்கள்தான் நாளின் பெரும்பாலான நேரத்தில் தங்களது வழக்கமான அலுவல்கள்அல்லது படிப்புக்கிடையே போட்ட ஸ்டேட்டஸ்க்கு எத்தனை லைக்ஸ், ஷேர், கமெண்டுகள் கிடைத்துள்ளன என அவ்வப்போது பார்த்து, இதில் எது குறைந்தாலும் மூட் அவுட் ஆகி, பிரதான வேலையை கோட்டை விட்டுவிடுகின்றனர்" என்று எச்சரிக்கிறது அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று. 

'மனித நடத்தையில் கம்ப்யூட்டர்கள்' என்ற தலைப்பில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு மூன்று கட்டங்களாக நடத்தப்பட்டதாகவும், முதல் கட்ட ஆய்வில் ஜெர்மன் மொழி பேசும் 123 பேர்கள் பங்கேற்றதாகவும், இவர்களில் பெரும்பாலானோர் ஃபேஸ்புக்கில் நீண்ட நேரம் செலவிட்ட பின்னர் தங்களுக்கு வெறுப்பு உணர்வும், மன அழுத்தமும், தனிமை உணர்வும் ஏற்பட்டதாக கூறினர் என்கிறார்கள் ஆய்வை நடத்திய ஆஸ்திரேலிய மனோதத்துவ நிபுணர்களான கிறிஸ்டினா சாகி மற்றும் டோபியாஸ் ஆகியோர். 

சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் என்பது உங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் தொடர்பில் இருப்பதற்காக உதவுகிறது என்றபோதிலும், அளவுக்கு அதிகமான பயன்பாடு வாழ்க்கையில் திருப்தி கொள்வதற்கான அடிப்படை மனோவியல் பண்புகளை குறைத்து, மன அழுத்தத்தை ஏற்படுத்திவிடும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளதாக அவர்கள் கூறுகின்றனர். 

மனச்சோர்வுக்கும், அளவுக்கு அதிகமான ஃபேஸ்புக் பயன்பாட்டிற்கும் நிச்சயம் தொடர்பு உள்ளதாக கூறும் அவர்கள், 263 பேர் பங்கெடுத்த இரண்டாம் கட்ட ஆய்விலும் இதே ரிசல்ட்டுதான் கிடைத்ததாகவும் தெரிவித்துள்ளனர். 

கடைசிக் கட்ட ஆய்வில் பங்கெடுத்த 101 பேரிடம், ஃபேஸ்புக்கில் லாக் இன் செய்து உள்ளே போன பின்னர் நீங்கள் மகிழ்ச்சியாக உணர்கிறீர்களா அல்லது மனச்சோர்வாக உணர்கிறீர்களா? என கேட்கப்பட்டது. பெரும்பாலானோர் என்ன சொல்லி இருப்பார்கள் என்பதை சொல்ல வேண்டியதில்லை. மிக மோசமான உணர்வையும், தனிமையாக இருப்பதாகவும் உணர்ந்ததாக அவர்கள் தெரிவித்ததாக கூறுகிறது அந்த ஆய்வு. 

ஆய்வை நம்புகிறோமோ இல்லையோ...அது விடுக்கும் எச்சரிக்கையை உணர்ந்தவர்கள் அலர்ட்டாகிவிடுவது நல்லது!