Responsive Ad

வளர்ந்து வரும் லினக்ஸ் சாம்ராஜ்யம்


இருபது ஆண்டுகளுக்கு முன்னால், லினஸ் டோர்வால்ட்ஸ் தன்னுடைய புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் திட்டம் குறித்து, யூசர்நெட் என்ற அஞ்சல் குழுவில் அறிவித்த போது, அது உலகை வென்று வாகை சூடும் என எண்ணிப் பார்த்திருக்க மாட்டார். 1991 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ல் இது பற்றி எழுதுகையில், சும்மா பொழுது போக்காகத்தான் இதனை உருவாக்குகிறேன் என்று குறிப்பிட்டிருந்தார். 80386 ப்ராசசர் இயக்கம் பற்றித் தெரிந்து கொள்வதற்காகத்தான், லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை வடிவமைத் ததாகவும் பின் நாளில் எழுதினார். ஆனால் நடந்தது வேறு. இன்று புதியதாக உருவாகும் அனைத்து ப்ராசசர்களும் லினக்ஸ் இயங்கும் வகையிலேயே அமைக்கப்படுகின்றன. லினக்ஸ் எந்த வகைக் கம்ப்யூட்டரையும், பெர்சனல் கம்ப்யூட்டர், நெட்புக், ஸ்மார்ட்போன் முதல் மெயின்பிரேம் வரை, மற்றும் பிற, என அனைத்து வகை கம்ப்யூட்டிங் பணிகளையும் எளிதாகவும், விரை வாகவும் மேற்கொள்ள உதவிடும் ஆப்பரேட்டிங் சிஸ்டமாக இன்று உருவெடுத்துள்ளது. டெல், எச்.பி. ஆரக்கிள், ஐ.பி.எம். என அனைத்து முன்னணி பெர்சனல் கம்ப்யூட்டர் நிறுவனங்களும் லினக்ஸ் சிஸ்டத்திற்குத் தொடக்கம் முதல் ஆதரவு அளித்தன. வர்த்தக ரீதியாக லினக்ஸ் சிஸ்டத்தினை எடுத்துக் கொண்ட ரெட் ஹேட் (Red Hat) நிறுவனம், இன்று 730 கோடி டாலர் மதிப்புள்ள நிறுவனமாக இயங்கி வருகிறது. 

லினக்ஸ் பெற்றுள்ள இந்த வெற்றி எளிதாக அதற்குக் கிடைக்கவில்லை. அது கடந்து வந்த பாதை முட்களும் தடைகளும் நிறைந்ததாகவே இருந்தது. மைக்ரோசாப்ட் இதற்கு முதல் எதிரியாக இருந்தது. தொழில் நுட்ப ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் பல தொல்லைகளை மைக்ரோசாப்ட் தந்தது. அனைத்தையும் லினக்ஸ் சமாளித்து முன்னேறியது.
இன்று கம்ப்யூட்டர் உலகில் வியத்தகு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்த மாற்றத்தில் லினக்ஸ் சிஸ்டம் சில நன்மைகளைப் பெற்றுள்ளது. அதே நேரத்தில் மாற்றத்திற்கும் உதவி வருகிறது. 
1. லினக்ஸ் எளிமை: லினக்ஸ் சிஸ்டம் தந்த இயக்கச் சூழ்நிலை, யூனிக்ஸ் இயக்கத்தினைப் பின்பற்றியே இருப்பதாக முதலில் குற்றம் சாட்டப் பட்டது. ஆனால், லினக்ஸ் அதன் தொடக்கத்தில் இருந்தே, புதிய கண்டுபிடிப்புடன் கூடிய நவீன தொழில் நுட்பம் தருவதாகவே அமைந்தது. வர்த்தக ரீதியாக யூனிக்ஸ் தொழில் நுட்பம், மிகவும் விலை உயர்ந்த ப்ராசசர்களில் மட்டுமே இயங்கியபோது, லினக்ஸ் வடிவமைத்த டோர்வால்ட்ஸ், லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை, மிகவும் விலை மலிவானதாக து86 ப்ராசசர்களில் இயங்க வைத்தார். 
2. அனைவருக்கும் சொந்தம்:லினக்ஸ் தொகுப்பின் இந்த வளர்ச்சி இன்டர்நெட் பயன்பாட்டின் மூலமே ஏற்பட்டது என்றால், அது மிகையாகாது. லினக்ஸ் கட்டமைப்பினை யார் வேண்டு மானாலும் திருத்தி அமைக்கும் வகையில் ஒரு திறந்த ஊற்றாகவே உள்ளது. உலகின் பெரிய வெற்றி பெற்ற ஓப்பன் சோர்ஸ் திட்டம் இதுவாகத்தான் இருக்கும். லினக்ஸ் இந்த உலகின் எண்ணிக்கை யிலடங்காத புரோகிராமர்களின் பங்களிப்பினால் உருவாகியுள்ளது; தொடர்ந்து உருவாகி வருகிறது. யார் வேண்டுமானாலும் இதன் குறியீடுகளைத்தரவிறக்கம் செய்திடலாம்; சோதனை செய்து பார்க்கலாம்; இதிலிருந்து கற்றுக் கொள்ளலாம்; மாற்றி அமைக்கலாம். இதற்கு எந்த கட்டணமும் இல்லை. தனிநபர் புரோகிராமர்கள் மட்டுமின்றி, நிறுவனங்களும் இதன் லினக்ஸ் கட்டமைப்பினை வளர்ப்ப திலும், மாற்றி அமைப்பதிலும் பங்களித்துள்ளன. 
3.இன்டர்நெட் இணைந்து வளர்ச்சி: லினக்ஸ் வளர்ச்சி அடைய இன்டர்நெட் ஒரு கருவியாய் இருந்து உதவியதுபோல, இன்டர்நெட் வளர்ச்சி அடையவும் லினக்ஸ் உதவியாய் இருந்து வருகிறது. லினக்ஸில் இயங்கும் வெப் சர்வர்கள், இமெயில் சர்வர்கள், பைல் சர்வர்கள், டேட்டா பேஸ் அமைப்புகள் மற்றும் பல சாதனங்கள் இன்டர்நெட்டினை இயக்க உதவுகின்றன. லினக்ஸ் அமைப்பின் இயக்குநர் கூறியபடி, நீங்கள் எப்போ தெல்லாம் இன்டர்நெட்டினைப் பயன்படுத்துகிறீர்களோ, அப்போ தெல்லாம் லினக்ஸ் சிஸ்டத்தையும் பயன் படுத்துகிறீர்கள். எடுத்துக் காட்டாக, கூகுள் தேடல் சாதனங்களைப் பயன் படுத்தாதவர்கள் இருக்க முடியாது. கூகுளின் தேடல் சாதனங்கள் அனைத்தும் லினக்ஸ் சிஸ்டத்தில் தான் இயங்குகின்றன. யாஹூவின் பெரும் பாலான சர்வர்களும் அவ்வாறே இயங்குகின்றன. 
4. டெஸ்க்டாப் லினக்ஸ்: டெஸ்க்டாப் கம்ப்யூட்டரில் லினக்ஸ் பயன்பாடு மிக மிகக் குறைவே. டேட்டா மையங்களிலும் இணைய சர்வர்களிலும் லினக்ஸ் அதிகம் பயன்பட்டாலும், டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களில் இதன் பயன்பாடு சொல்லிக் கொள்ளும் அளவில் இல்லை. மொத்தத்தில் 1% கூட இது இல்லை. சில நிறுவனங்கள் தங்கள் கம்ப்யூட்டர் களில் லினக்ஸ் தொகுப்பைப் பதிந்தே விற்பனை செய்தாலும், அதனைத் தொடர்ந்து பயன்படுத்துபவர் எண்ணிக்கை மிகவும் குறைவே. லினக்ஸ் சிஸ்டத்தினால், விண்டோஸ் சிஸ்டம் பெற்றுள்ள இடத்தினை சிறிது கூட அசைக்க முடியவில்லை. ஆனால் பல நாடுகளில், அரசு அலுவலகங் களில், டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களில் லினக்ஸ் பயன்பாட்டினைக் காண முடிகிறது. இதற்குக் காரணம் தங்கள் அலுவலர் களின் கம்ப்யூட்டர் பயன்பாட்டினைக் கட்டுப்பாட்டில் கொள்ள, நிர்வாகத்திற்கு லினக்ஸ் உதவுகிறது. மேலும் லினக்ஸ் இலவசம் என்பதால், செலவு குறைகிறது. இந்த வகையில் உபுண்டு லினக்ஸ் (Ubuntu Linux) டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களில் பிரபலமாக இயங்கும் ஆப்பரேட்டிங் சிஸ்டமாக உள்ளது. வரும் 2015 ஆம் ஆண்டில், இது 20 கோடி டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களில் இடம் பெறும் என்று இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. 
5. மாறிவரும் சூழ்நிலைக்கு லினக்ஸ்: கம்ப்யூட்டர் பயன்பாட்டு வகையானது முற்றிலுமாக மாறி வருகிறது. பாரம்பரிய டெஸ்க் டாப் கம்ப்யூட்டர் பயன் பாட்டினை விட்டுவிட்டு, புதிய சாதனங்களுக்கு மக்கள் மாறி வருகின்றனர். எடுத்துக்காட்டாக, ஜப்பானில் 50% மின்னஞ்சல்கள், மொபைல் போன் மூலமே அனுப்பப்பட்டு வருகின்றன. இந்த வழக்கம், ஐரோப்பியா மற்றும் பிற ஆசிய நாடுகளிலும் பரவி வருகிறது. 
அமெரிக்காவில் விற்பனையாகும் ஸ்மார்ட் போன்களில் பெரும்பாலானவற்றில், ஆண்ட்ராய்ட் சிஸ்டம் பயன் படுத்தப்படுகிறது. ஆண்ட்ராய்ட், லினக்ஸ் கெர்னலை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட ஒரு மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டமாகும். 
6. மைக்ரோசாப்ட் எதிரியா? லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைத் தன் வருமானத்தைக் குறைக்கும் எதிரியாக, மைக்ரோசாப்ட் தொடக்கத்தில் கருதி யதாக நமக்குத் தகவல்கள் கிடைத்தன. ஆனால் பின்னர், மைக்ரோசாப்ட் சுசி லினக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டு, லினக்ஸ் உரிமங்களை வாங்கி, தன் வாடிக்கையாளர்களுக்கு மறு விற்பனை செய்தது. தொடர்ந்து இந்த விற்பனை ஒப்பந்தங்கள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. 
லினக்ஸ் தற்போது வெற்றி பெற் றுள்ள, அதிகப் பயனுள்ள ஆப்பரேட்டிங் சிஸ்டம் என உறுதியான பெயரைப் பெற்றுவிட்டது. இனி, இந்த நல்ல பெயரினைத் தொடர்ந்து பாதுகாப்பதே, லினக்ஸ் வழங்கும் நிறுவனங்களுக்குள்ள சவாலாகும். 

லினக்ஸ் டவுன்லோட் செய்ய இங்கு அழுத்தவும் .