கம்ப்யூட்டர் வாங்கி சில மாதங்கள் கழித்து நாம் அனைவரும் எதிர் கொள்ளும் ஒரு அனுபவம், கம்ப்யூட்டர் மிக மெதுவாக இயங்குகிறது என்பதுதான். இதற்குக் காரணம் விண்டோஸ் இயக்கத்தை நாம் தொடங்குகையில், பல புரோகிராம்கள் தானாக இயங்கத் தொடங்குகின்றன. நாம் பல சாப்ட்வேர் புரோகிராம்களை இன்ஸ்டால் செய்கையில், பல புரோகிராம்கள், சிஸ்டம் இயங்குகையிலேயே தொடங்கும்படி பதியப்படுகின்றன. அது மட்டுமின்றி, முதன்மை புரோகிராம் மட்டுமின்றி, ஒரு சில கூடுதல் புரோகிராம்களும் பதியப்படுகின்றன. ஒரு சில மட்டுமே, தானாக சிஸ்டம் இயக்கத்துடன் தொடங்கவா என்று கேட்டு நம் அனுமதியைப் பெறுகின்றன. இவை விண்டோஸ் இயக்கத்திற்கு தேவையா என்றால், நிச்சயமாக இல்லை என்றுதான் கூற வேண்டும். உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டர் இயங்கத் தொடங்குகையில் என்ன என்ன புரோகிராம்கள் விண்டோஸ் இயக்கத்துடன் ஒட்டிக் கொண்டு இயங்கி, ராம் நினைவகத்தின் இடத்தை எடுத்துக் கொள்கின்றன என்று அறிய வேண்டுமா? இதற்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் சிறிய புரோகிராம் ஒன்றைத் தருகிறது.
அதன் பெயர் ஆட்டோ ரன்ஸ் (Autoruns). இதனைhttp://technet.microsoft.com/enus/sysinternals/bb963902என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து டவுண்லோட் செய்து பதிந்து இயக்கலாம். இவ்வாறு இயக்குகையில், நீங்கள் இது போன்ற புரோகிராம் எதனையும் இயக்கிப் பார்க்காதவராக இருந்தால், மிகவும் ஆச்சரியம் அடைவீர்கள். சாதாரணமாகப் பயன்படுத்தும் கம்ப்யூட்டர் ஒன்றில் 100க்கும் மேற்பட்ட தானாக இயங்கும் புரோகிராம்கள் இயங்கிக் கொண்டிருப்பதனைப் பார்க்கலாம். இவற்றில் 20 முதல் 50% வரை, கம்ப்யூட்டர் இயங்கும்போது தேவையற்றதாகத்தான் இருக்கும். தானாக இயங்கும் புரோகிராம்கள் பட்டியலிட்ட வுடன், நீங்களாகவே எந்த புரோகிராம்கள் நம் இயக்கத்திற்குத் தேவையில்லை என அறிந்து கொள்ளலாம். இவற்றை கண்ட்ரோல் பேனல் சென்று Add/Remove Programs வழியாக நீக்கலாம். Autoruns போலவே ஆகிய Silent Runners (http://www.silentrunners.org/) மற்றும் Hijackthis(http://free.antivirus.com/hijackthis/) புரோகிராம்களும் இவ்வகையில் நமக்கு தானாக இயங்கும் புரோகிராம்களைக் காட்டிக் கொடுக்கும். இவை எல்லாமே மிகப் பயனுள்ளவை. ஒவ்வொன்றும் சில கூடுதல் நன்மைகளையும், வேண்டாத சிலவற்றையும் தரும். புதியதாக இந்த புரோகிராம்களைப் பயன்படுத்துபவர்கள், எந்த எந்த புரோகிராம்கள் நமக்குப் பயனின்றி இயங்குகின்றன என்பதைத் தெரிந்து கொள்வதில் கவனமாக இயங்க வேண்டும். ஆட்டோரன்ஸ் மூலம் இவற்றை நீக்கவும், நீக்கியபின்னர் சிஸ்டம் இயங்குவதில் பிரச்னை ஏற்பட்டால், மீண்டும் கொண்டு வரவும் முடியும். 
இது போன்ற புரோகிராம்கள் நம் கம்ப்யூட்டரில் நுழைவதனை எப்படித் தடுப்பது? நம்மால் இயலாது. ஏனென்றால், இவை உள்ளே நுழைகையில் நமக்குத் தெரிவதில்லை. இவற்றால் நம் கம்ப்யூட்டரின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது. ஏனென்றால் இவை எதற்காகச் செயல்படுகின்றன என்பதனையும் நாம் அறிவதில்லை. இவை எதற்காகச் செயல்பட்டாலும், இவற்றின் இயக்கம் நம் கம்ப்யூட்டரின் திறனை மந்தப்படுத்துகின்றன என்பது உண்மை. எனவே, இது போன்ற ஆட்டோ ரன் புரோகிராம்களை பதிந்திடும் நிறுவனங்கள் தான், தாங்களாகவே முன் வந்து இவற்றின் எண்ணிக்கையினைக் குறைக்க வேண்டும். அல்லது ஆப்பரேட்டிங் சிஸ்டமே, குறிப்பிட்ட குறைந்த நேரத்திற்குள், கம்ப்யூட்டர் சிஸ்டம் இயங்க வேண்டும் என்பதனை வரையறை செய்து, அந்த நேரத்திற்கும் மேலாக தாமதம் ஏற்பட்டால், மேலும் தானாக இயங்கும் புரோகிராம்கள் பதிவு செய்வதனைத் தடுக்க வேண்டும். அல்லது பயனாளருக்கு அறிவிக்க வேண்டும். சாப்ட்வேர் நிறுவனங்கள் தங்களுக்குள்ளாக சில கொள்கைகளை அமைத்துச் செயல்பட்டால் தான், இதனை ஒரு கட்டமைப்பிற்குள் கொண்டு வர முடியும் என இத்துறை வல்லுநர்கள் கூறுகின்றனர். ஏற்கனவே பதியப்பட்ட ஒரு புரோகிராமின் இயங்கு திறனை, புதிதாகப் பதியப்பட இருக்கும் ஒரு புரோகிராம் தொல்லை கொடுக்கும் எனத் தெரிய வந்தால், அது பதியப்படுவது தடுக்கப்பட வேண்டும். அல்லது அத்தகைய சோதனைக்கு, அந்த புரோகிராம் வெளியாகும் முன்பே உட்படுத்தப்பட்டு, தொல்ல கொடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருந்தால், தடை செய்யப்பட வேண்டும் எனவும் கருதுகின்றனர்.