பெண்களை விடாமல் துரத்தும் "இணைய மானபங்கம்": அதிர்ச்சி தரும் உண்மைகள்

தொழில் நுட்பம் வளர்ந்து வரும் இந்த காலக்கட்டத்தில் அதற்கு ஏற்ப பல பிரச்சனைகளும் உருவெடுக்க ஆரம்பித்துள்ளன. இவை பெண்களின் பாதுகாப்பை முக்கியமாக குறி வைக்கின்றன.முன்பு எல்லாம் ஒரு பெண்ணை அவமானப்படுத்த மற்றவர்களிடம் இல்லாததை கூறியும், அவதூறுகளை பரப்பும் செய்கைகளிலும் ஈடுபடுவர்.

ஆனால் தற்போது நிலைமை அப்படியே தலைகீழாக மாறிவிட்டது. பெண்களுக்கு எதிராக நேரடியாக செயல்பட்டு வந்தவர்கள் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக இணையத்தின் வழியாக ஆபாச அச்சுறுத்துதலை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

சமூக வலைதளங்களில் நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது.

ஆபாசமும், வன்மமும் கலந்த வாசகங்களை வெளியிடுவது, ஆபாச ‘போஸ்ட்டுகளை’ ‘டாக்’ செய்தல், பெண்களின் புகைப்படங்களை பதிவிட்டு விலைமாதுகளாக சித்தரித்தல் என பல வகைகளில் அச்சுறுத்துதலை நடத்தி வருகிறார்கள்.


இவற்றை சில பெண்கள் புறந்தள்ளினாலும், சிலப் பெண்கள் இவற்றால் மனதளவில் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இணையத்தில் பிணந்திண்ணும் கழுகுகளாக சுற்றும் இவர்கள் தங்களுக்கான இரையை தேடிக் கொண்டே அலைகிறார்கள்.

இந்த இணைய மானபங்க பேர்வழிகள் "ட்டிராக்கிங் சாப்ட்வேர்" மூலம் பெண்களை மானிட்டர் செய்து, அதை அவ்வப்போது நோட்டமிட்டுக் கொண்டிருப்பதை தலையாய வேலையாக கொண்டுள்ளனர்.

‘சைபர் ரேப்’ எனப்படும் இந்த இணைய மான பங்கத்தில் பாதிக்கப்படும் பெண்களின் அளவு அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

’சைபர் ரேப்’ மூலம் பாதிக்கப்படும் பெண்களில் 18 சதவீதம் பேருக்கு இணைய பாதிப்பு பற்றிய விழிப்புணர்வே இல்லை என்பது பரிதாபகரமான உண்மையாக உள்ளது.

பாதிக்கப்படுவது தெரிந்தாலும் அதை பெற்றோரிடம் கூறி நடவடிக்கை எடுக்க தயங்குபவர்களாக 46 சதவீதம் பேர் இருக்கிறார்கள். அதேசமயம் 35 சதவீதம் பேர் தான் எதிர்தாக்குதல் நடத்தவும், புகார் கொடுக்கவும் தயங்காமல் முன்வருகிறார்கள்.

ஒரு வருடத்தில் 15 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் 9 கோடி பேர் ’சைபர் ரேப்’பால் பாதிக்கப்படுகிறார்கள் என்று ஐ.நா.வின் ‘சைபர் வயலன்ஸ் எகைன்ஸ்ட் உமன் அன்ட் சில்ரன்’(cyber violence against women and children) என்ற ஆய்வறிக்கை குறிப்பிட்டுள்ளது.

மேலும், இணையத்தில்ஆண்களை விட பெண்கள் ஆபாசமாக சித்தரிக்கப்படுவது 27 மடங்கு அதிகமாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இணையதளத்தில் பெண்களுக்கு ஆபாச தொந்தரவு தருபவர்கள் பெண்களின் பெயரில் இருக்கும் சில ‘யூசர் நேம்’களையே (User name) குறிவைத்து அவர்கள் செயல்படுகின்றனர்.

இன்டர் நெட் பயன்படுத்துவோரில் ஐந்தில் ஒருவர் ஆபாச தொந்தரவுக்கு உள்ளாகிறார்கள் என்றும், இதில் 18 முதல் 24 வயதுவரை உள்ள பெண்களே அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள் எனவும் அந்த ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது.
பெண்களை விடாமல் துரத்தும் "இணைய மானபங்கம்": அதிர்ச்சி தரும் உண்மைகள் பெண்களை விடாமல் துரத்தும் "இணைய மானபங்கம்": அதிர்ச்சி தரும் உண்மைகள் Reviewed by அன்பை தேடி அன்பு on Rating: 5